10

உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து வெளியில் வந்த போது வெயில் நன்கு எறித்தாலும், மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவியது. அருகில் உள்ள உணவகத்தின் முன் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் சாப்பிட்டு முடித்து ஐஸ்கிறீம் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் வயிற்றைக் கிள்ளியது. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போக வேண்டும்.

மனசு அவசரப்பட்டது. கால்கள் விரைந்தன. பேரூந்துத் தரிப்பிடத்தைத் தாண்டும் போது முகஸ்துதிகளும், நட்பார்ந்த சிரிப்புகளும் மனதுக்கு இதமாக இருந்தன.

வழமை போலவே இலங்கைத் தமிழன் ஒருவன் குப்பைவாளிக்குள் வெற்றுப் போத்தல்களைத் தேடிக் கொண்டிருந்தான். அவனை அந்தக் கோலத்தில் காணும் போதெல்லாம் மனசு கொஞ்சம் சங்கடப்படும். விற்றால் அவனுக்கு ஒரு போத்தலுக்கு 25சதங்கள் கிடைக்கும்.

அவனையும் தாண்டி வீதியை அண்மிக்கும் பொழுதுதான் அவ்விடம் சற்று அசாதாரண நிலையில் இருப்பதை உணர்ந்தேன். நான்கைந்து பெண்கள் சூழ்ந்து நிற்க ஒரு பெண் ஒரு ஆடவனை பட்டம் விடுவது போல ஒரு கையில் இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள். அவனும் வலித்துக் கொண்டு ஓடுவதற்கு தயாரானவன் போல இழுத்துக் கொண்டு நின்றான். குளிர்காற்று அவனை ஒன்றுமே செய்யவில்லை. முகமெல்லாம் வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. கலவரம் படர்ந்திருந்தது.

என்ன நடக்கிறது என்று அனுமானிப்பதற்கு எந்த அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. திடீரென அந்தப் பெண்ணின் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடியவன் சட்டென்று நடுவீதியில் மல்லாக்காகப் படுத்தான். படுத்தான் என்பததையும் விட விழுந்தான் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அருகே கைக்குழந்தையுடன் நின்ற ஒரு இளம்பெண்ணைப் பார்த்து “என்ன நடக்கிறது இங்கே?“ என்றேன்.

“சாகப் போகிறானாம். வாழ இனி விருப்பமில்லையாம். பொலிசுக்கு அறிவித்து விட்டோம்…“ அவள் சொல்லி முடிக்கவில்லை. வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாத குறையாக கிறீச் சத்தங்களுடன் அவன் முன்னே வரிசையாகத் தரித்தன.

முதல் காரில் இருந்தவன் காரை விட்டு இறங்கி ஓடி வந்தான். அவனை அழுங்குப் பிடிபிடித்து இழுத்து வந்து ஒரு படியில் இருத்தி “என்ன பிரச்சனை?“ என்று கேட்டான். 30 – 35 வயதுகள் மட்டுமே மதிக்கத்தக்க அந்த ஆடவன் “நான் சாகப்போகிறேன். என்னைச் சாகவிடுங்கள்.. “ என்று உச்சாடனம் செய்து கொண்டே இருந்தான்.

இப்போது பிடித்திருப்பவனின் பிடியிலிருந்து அவன் மீண்டும் வீதிக்கு ஓட முடியாது என்பது திடம். எனக்கும் அவசரம். நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். இல்லை விரைந்தேன்.

பத்திரிகையில் அவன் பற்றிய செய்தி வரும் என நினைத்தேன். இன்று வரை இல்லை. அங்கு நின்றிருந்த பெண்கள் எவரும் எனக்கு முன் அறிமுகமானவர்கள் அல்லர். ´அவன் இப்போது எப்படி இருக்கிறான்?´ என்று யாரையும் கேட்க முடியவில்லை.

மனசுக்குள் அந்த ஆடவனின் முகம் உறுத்திக் கொண்டே இருந்ததால் எனது மகனைத் தொடர்பு கொண்டு “இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஏன் அது பற்றி எதுவுமே பத்திரிகையில் வரவில்லை? “ எனக் கேட்டேன்.

“தற்கொலை சம்பந்தமான விவரணங்கள் எதுவும் முடிந்தவரை எமது பத்திரிகையில் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எமது பத்திரிகையால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்பட்டு விடக் கூடாது“ என்றான்.

– 22.9.2014

Share This Book